சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச செயற்பாடாக இந்தப் பிக்குவின் அட்டகாசம் அமைந்துள்ளது. காவற்துறையினரோ அரசாங்க அதிகாரிகளோ அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நல்லாட்சி இன்று அரசோச்சுகிறது.
இலங்கையின் முதன்மை மதமாக புதிய அரசியலமைப்பிலும் பௌத்தமே இடம்பெறுமென இலங்கையின் பிரதமர் சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த முடிவை தமிழர் தலைமையும் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஏற்றுக் கொண்டுள்ளதென்ற பிரதமரின் மேலதிக அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
1948க்குப் பின்னரான சகல அரசியலமைப்புகளும் பௌத்தத்துக்கே முதலிடம் கொடுத்து வந்தன. இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் நல்லாட்சியின் அரசியலமைப்பும் அதனைத்தான் சொல்கிறது.
எதிர்க்கட்சியென்று அதிகாரபூர்வமாக இருக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தனது பதவிப் பெயரளவிற்காவது இதற்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
திருமணம் செய்யாது கணவன் மனைவியாக இல்லறம்; நடத்தும் மேற்குலகின் கூடிவாழும் (Living together) பாணியில் சிங்கள அரசுடன் சேர்ந்தியங்குவதால் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் அல்லது எதிர்க்கக்கூடாதென்பது இவர்களுக்கான நியதி போலும்.
புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்த ஓர் அறிக்கை, வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக 100 விகாரைகளை அமைக்கவும், குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளைப் புனரமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்பதாகும்.
புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை பூரண ஆதரவு கொடுத்துள்ளது.
சீனாவிலுள்ள பௌத்த சங்கம் ஒன்றின் தலைவரான மிங் செங் என்பவர் இருபது முதல் இருபத்தினான்கு மில்லியன் வரையான ரூபாவை இதற்கென அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் அறிக்கை கூறுகிறது.
யுத்தத்துக்குப் பின்னரான காலங்களில் தமிழர் தாயகத்தில் புத்தர் சிலைகள் நாட்டப்படுவதையும் பௌத்த விகாரைகள் முளைவிடுவதையும் அந்த மண்ணின் உருத்துக்காரர்கள் எதிர்த்து வருகின்றவேளையில், சீனாவின் பௌத்த சங்கமொன்றின் தலைவர் அதே தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகளுக்கு நிதி வழங்குவதன் பின்னணியை சாதாரணமாகப் பார்க்க முடியாது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது அம்பாந்தோட்டையில் புதிய விமான தளத்தையும், நவீன துறைமுகத்தையும் அமைத்துக் கொடுத்தது சீனா.
இப்போது, மைத்திரியின் ஆட்சியில் தமிழர் தயாகத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கவும், புனர்நிர்மாணம் செய்யவும் அதே சீனா நிதி வழங்க முன்வந்துள்ளது. அதுவும் 100 விகாரைகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மகிந்தவின் ஆட்சியின்போது திருமலையின் மத்தியிலுள்ள நகரசபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக புத்தர் சிலையொன்று நாட்டப்பட்ட சம்பவம் இலகுவாக மறந்துவிட முடியாதது.
அப்போது வன்னித் தலைமையில் தாயக நிர்வாகம் இயங்கி வந்தது. திருமலை மக்கள் அந்தப் புத்தர் சிலை கண்டு துணிச்சலோடு பொங்கியெழுந்தனர்.
இன்று பௌத்த துறவிகளின் அட்டகாசமும், இராணுவத்தின் அத்துமீறல்களும், சிங்கள அரசியல்வாதிகளின் அபரிமிதமான துணிச்சலும் புதுப்புது வடிவில் பௌத்த சிலைகளை தமிழ் மண்ணில் நாட்ட ஏதுவாகியுள்ளது.
வலிகாமம் வடக்கிலுள்ள காங்கேசன்துறையில் குமாரகோவில் என்ற சைவ ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்துக்கு முன்னால் கமுணு விகாரையென்ற பௌத்த வழிபாட்டுத் தலமொன்றை இராணுவம் நிறுவியுள்ளது.
சைவ ஆலயத்திலிருந்த பிள்ளையார், அம்மன், முருகன் சிலைகள் கமுணு விகாரையின் ஒருபுறத்தை அலங்கரிக்க வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறையிலுள்ள இறக்காமம் என்ற இடத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் சில பிக்குகள் ஒன்றுசேர்ந்து புத்தர் சிலையொன்றை நாட்ட முற்பட்டபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினரான தயா கமகே அதனை அகற்ற முடியாதென்று அழுத்திக் கூறிவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான இவர,; கைத்தொழில் அமைச்சராகவும் இருக்கிறார்.
இவரது மனைவி அனோமா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வாயிலாக நாடாளுமன்ற உறுப்பிரானவர். இவர் நீர்ப்பாசன – விவசாய பிரதியமைச்சராகவும் உள்ளார்.
இந்தக் கணவனும் மனைவியும் ரணில் விக்கிரமசிங்கவின் குசினி வட்ட நண்பர்கள்.
நல்லாட்சி அரசில் நல்லெண்ணச் செயற்பாடுகளை பிரதமர் ரணிலின் தலைமையில் அவரது நண்பர்கள் எவ்வாறு மேற்கொள்கின்றனர் என்பதற்கு இறக்காமம் புத்தர் சிலை ஆகப்பிந்திய ஒரு சாட்சி.
இவ்விடத்தில் 1970ல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, யாழ்ப்பாணத்தில் தமிழ் பௌத்த பாடசாலைகளை உருவாக்கியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையுண்டு.
அவ்வேளையில், அங்கு மேலோங்கியிருந்த சாதிப் பிரச்சனையை ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்து, வர்க்க முரண்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தெரிந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் அம்மையார் இப்பாடசாலைகளை உருவாக்கினார்.
யாழ்ப்பாணத் தமிழர்களை சாதியின் பெயரால் நிரந்தரமாகப் பிரித்து வைக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழ்ச்சி இது.
பௌத்த பிக்குகள் சிலர் இப்பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்க அனுப்பப்பட்டனர். அந்தப் பாடசாலைகளுக்குள் பௌத்த மத வழிபாட்டு மண்டபங்களும் நிறுவப்பட்டன.
1977 தேர்தலில் சிறிமாவோ அரசு மண் கவ்வியதோடு, பௌத்த பாடசாலை முயற்சிகளும் கரைந்து போனது.
அன்று சிறிமாவோ மேற்கொண்ட அந்த முயற்சியை, அவரது புதல்வியான சந்திரிகா நல்லிணக்கத் தலைவியாக இயங்கும் இன்றைய அரசு வேறுவழியாக மேற்கொள்ள முயல்கிறது.
இதன் ஓரம்சமாகவே மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமைப் பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும்.
மண்முனை தெற்கு பட்டிப்பளைப் பிரதேசத்தில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட தமிழருக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்தி அதில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள இவர் நடவடிக்கையெடுத்து வருகிறார்.
இச்செயற்பாட்டை சட்டரீதியாகத் தடுக்க சென்ற கிராமசேவகர் உட்பட அரசாங்க பணியாளர்களை காவற்துறையினர் முன்பாக வைத்து தகாத வார்த்தைகளால் ஏசித் துரத்தியுள்ளார் இந்தப் பிக்கு.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச செயற்பாடாக இந்தப் பிக்குவின் அட்டகாசம் அமைந்துள்ளது. காவற்துறையினரோ அரசாங்க அதிகாரிகளோ அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நல்லாட்சி இன்று அரசோச்சுகிறது.
இந்தப் பிக்குவின்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்களும் பொதுஅமைப்புகளும் விடுத்த வேண்டுகோள் ஜனாதிபதினதும் பிரதமரினதும் காதுகளுக்குள் புகமறுக்;கிறது.
நாடாளுமன்றத்திலுள்ள தமிழர் தலைமை இது எதுவும் தெரியாததுபோல் நடித்துக் கொண்டு, இந்த மாதம் 19ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்பின் முதற்கட்ட அறிக்கைபற்றி பேசிக் கொண்டிருக்கிறது.
தமிழரின் காணிகளில் ஒரு பகுதி இராணுவத்தாலும் இன்னொரு பகுதி பிக்குகளாலும் சூறையாடப்படுகின்றன. எஞ்சியுள்ள இடங்களில் அரச மரக்கன்றுகள் நாட்டப்பட்டு புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன.
இதன் பின்னர், நடைமுறைக்கு வரப்போவதாகக் கூறும் எந்தத் தீர்வும் அந்த மண்ணின் பூர்வீகச் சொந்தக்காரர்களுக்கானதாக இருக்காது என்பது நிச்சயம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment