இந்தத் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் எந்தவொரு உறுப்பு நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்று எத்தனையோ வலுவான காரணங்களை முன்வைத்து மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் கடந்த 18 மாதங்களில் 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்றுவதில் எத்தனையோ விடயங்களைச் செய்திருக்க முடியும். செய்திருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களும் சரி, இலங்கை விவகாரத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஏனைய நாடுகள் மற்றும் அமைப்புக்களும் சரி திருப்தி அடையத்தக்க வகையிலான முன்னேற்றத்தைக் காட்ட அரசாங்கம் தவறியிருக்கின்றது.
இந்த மனித உரிமைப் பேரவையின் கூட்ட அமர்வின்போது பல நாட்டு பிரதிநிதிகளும் அதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த வருடம் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தைத் தகுந்த முறையில் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தாராளமாகவே இடம்பெற்றிருந்தன என்பது ஏற்கனவே பல்வேறு தரப்பினராலும், பல்வேறு தகவல்கள், ஆதாரங்களின் மூலமாக பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆயினும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த உரிமை மீறல் சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவில்லை. பொறுப்பு கூறுவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுமில்லை.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தின்படி கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி விசாரணைகளை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன், உரிய இழப்பீட்டை அரசு வழங்கியிருக்க வேண்டும். அத்துடன், குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவதன் ஊடாகவும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதன் ஊடாகவும், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பன மீண்டும் நிகழாமல் உறுதி செய்திருக்க வேண்டும். அல்லது அதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னேற்றகரமான ஒரு சூழ்நிலையை அரசாங்கம் காட்டியிருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை.
மாறாக 30/1 தீர்மானத்தின் முக்கிய அம்சங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் அரசாங்கம் கூறி வருகின்றது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு அனுசரணை வழங்கிய அரச தலைவர்களும் அரச தரப்புப் பிரதிநிதிகளும், அதனை முழுமையாக நிறைவேற்றுவதாகவே உறுதியளித்திருந்தனர்.
பிரேரணையை நிறைவேற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலேயே கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்க முடியாது என்று அரசாங்கத் தரப்பினர் மறுப்பு தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர்.
அது மட்டுமல்லாமல் யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை என்பதை ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பிலான பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை உள்ளது உள்ளபடி அவதானித்திருந்தார்கள். அவ்வாறு நிலைமைகளை நேரில் கண்டறிந்திருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உள்ளிட்ட பலரும், மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றே சுட்டிக்காட்டியிருந்தனர். அரசாங்கம் முன்னெடுத்திருந்த சிறிய அளவிலான நடவடிக்கைகளை அவர்கள் வரவேற்று பாராட்டுவதற்குத் தவறவில்லை. அதேவேளை காரியங்கள் முறையாக நடைபெறவில்லை என்பதை எடுத்துக்காட்டவும் அவர்கள் தயங்கவில்லை.
செயற்பாடுகள் உளப்பூர்வமாக மேற்கொள்ளப்படுமா?
இத்தகைய பின்னணியில்தான் முக்கியமானதொரு கேள்வி எழுகின்றது. அரசாங்கத்திற்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்தி, பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமா? இலங்கை அரசாங்கத்தின் கடந்த 18 மாத காலச் செயற்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும்போது, வரப்போகின்ற இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் உளப்பூர்வமாகச் செயற்படும் என்று நம்பலாமா – எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடும்போக்கு நிலையில் காரியங்களை முன்னெடுத்திருந்தார். அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்போக்குடையவர், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருப்பவர், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் செயற்படுகின்ற ஒரு தலைவராகக் காட்சியளித்தவர் என்ற காரணத்திற்காக பாதிக்கப்பட்ட மக்கள் அவர் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆயினும், அவருடைய மென்போக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அவர் வெளிக்காட்டிய அனுதாப நிலையும், அரசியல் ரீதியாக பலவீனமாகவே உள்ளது என்பதை கடந்த இரண்டு வருட காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு கண்டறிந்திருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியற்றவராகவும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் ஆறுமாத காலத்திற்குள் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவராகவுமே அவர் இருக்கின்றார் என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டத்தக்க வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை அவர் அடுத்த இரண்டு வருட காலத்தில் முழுமையாக நிறைவேற்றுவார் என்பதை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அது தொடர்பில் அவர் மீது நம்பிக்கை கொள்ளவும் முடியாது என்றே கூற வேண்டும்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
கலப்பு நீதிமன்ற விசாரணைப்பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதே ஐ.நா. பிரேரணையின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. ஆனால் அரசு கலப்பு நீதிவிசாரணைப் பொறிமுறையை ஒருபோதும் உருவாக்க மாட்டாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் கூறியிருக்கின்றார். குறிப்பாக இராணுவத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போவதில்லை. அதற் இடமே கிடையாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவ அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவரை அடியொற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை. உள்ளக விசாரணைகளே நடத்தப்படும். வேண்டுமானால் வெளிநாட்டு நீதிபதிகளின் ஆலோசனைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம் என கூறியிருக்கின்றார். நாட்டின் பொறுப்பு வாய்ந்த அதியுச்ச அரச தலைவர்களாகிய அவர்கள் இருவருமே, இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களிலோ அல்லது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களிலோ ஈடுபடவில்லை. அவர்கள் குற்றமிழைக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள்.
நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் முரண்பாடானதோர் அரசியல் நிலைப்பாடும், முரண்பட்டதோர் அரசியல் போக்கும் நிலவுகின்ற நிலையில் இது அவர்களுடைய அரசியல் ரீதியான நிலைப்பாடாக இருக்கலாம்.
ஆனால் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்புக்கூற வேண்டும் என்று, நாட்டு மக்கள் அனைவருக்குமே அவர்கள் இருவரும் முக்கிய அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் மனித உரிமை மற்றும் மனிதாபிமானம் சார்ந்து நீதியை நிலைநாட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியற்றவர்களாகவும் செயல் மந்தம் கொண்டவர்களாகவுமே காணப்படுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற மனிதாபிமானம் நிறைந்த அரசியல் நிலைப்பாட்டிலும் பார்க்க, இனவாத அரசியல் போக்கில் குற்றமிழைத்திருந்தாலும்கூட, பயங்கரவாதிகளாக அரசியல் இலாப நோக்கில் சித்திரிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட இராணுவத்தினரைத் தண்டனைகள் பெறுவதில் இருந்து காப்பாற்றுவதன் மூலம், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இனவாதம் தோய்ந்த சுய அரசியல் இலாப நிலைப்பாட்டில் அவர்கள் மிகவும் பற்றுறுதி கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் வெளிவருவது என்பது இலங்கையின் இதுகால வரையிலான ஆட்சிமுறை சார்ந்த அரசியல் போக்கில் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. பல்லின மக்களும், பல்மதம் சார்ந்த மக்களும் வாழ்கின்ற ஒரு நாடாக இலங்கையைப் பார்ப்பதிலும் பார்க்க, பௌத்த சிங்கள மக்களுக்கே உரிய ஒரு நாடாக நோக்குகின்ற இனவாதப் போக்கிலேயே ஆட்சியாளர்கள் இதுவரையில் செயற்பட்டு வந்துள்ளார்கள்.
முப்பது வருட கால யுத்தத்தை வெற்றிகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்த வெற்றிப் பெருமிதத்தில் ஏதேச்சதிகாரப் போக்கில் காலடி எடுத்து வைத்ததையடுத்து, அவரைத் தோற்கடிப்பதற்காக முதன் முறையாக இந்த நாட்டின் இரண்டு சிங்கள தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து ஓர் ஆட்சியை அமைத்திருக்கின்றன. முரண்பட்ட போக்குடைய இரண்டு தேசிய கட்சிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் குடும்ப ஆதிக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் நாட்டில் ஜனநாயகத்தை (ஓரளவுக்கு) கட்டியெழுப்புவதற்காகவுமே ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற பெயரில் இந்த அரசாங்கத்தை அமைத்து நடத்திக் கொண்டிருக்கின்றன.
தங்களுக்குள் அரசியல் ரீதியான முரண்பாடுகளையும் மாற்று வழி போக்குகளையும் கொண்டிருந்தாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கும், அவர்களையும் சிங்கள, பௌத்த மக்களுடன் சரிசமனான அரசியல் உரிமை கொண்டவர்களாக வாழச் செய்வதற்கும் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தயாராக இல்லை. அந்த விடயத்தில் அவர்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். ஏதாவது ஒரு கட்சி சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் சற்று மென்போக்கைக் காட்டினாலும், அதனை மற்ற கட்சி சகித்துக் கொள்வதில்லை. உடனடியாகவே அரசியல் ரீதியாக வெகுண்டெழுந்து இனவாதத்தைக் கக்கி, அந்த அரசியல் மென்போக்கை மொட்டிலேயே கருகச் செய்துவிடுவார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மனித உரிமை மீறல்களினால், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்குரிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை முழுமையாக எதிர்த்து நிற்கின்றார்கள்.
இத்தகைய அரசியல் கடும் போக்கைக் கொண்ட அரசாங்கத்திற்கே ஐ.நா.வின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக மனித உரிமைப் பேரவையினால் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நிலைப்பாடு
இலங்கைக்கு எதிராக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒப்பீட்டளவில், மிகவும் சிறிய அளவிலான முன்னேற்றத்தையே அரசு காட்டியிருக்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள், அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக பிரேரணையை முழுமையாக அல்லது முடிந்த அளவில் நிறைவேற்றிவிடலாம் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
அரசாங்கத்தின் மந்த கதியான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றன. அதில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்தி வலியுறுத்தப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதற்காக அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து கொண்டு வந்துள்ள பிரேரணையில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் விதிக்கவில்லை. இது அந்தப் பிரேரணையின் வலுவற்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடந்த ஒன்றரை வருடங்களாகப் போதிய அளவில் அரசாங்கம் செயற்படவில்லை என (குற்றம்சாட்டும் தொனியில் என்றுகூட கருதலாம்) வலுவாகச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அந்தப் பிரேரணையில் அடுத்த இரண்டு வருட காலத்திலும் கட்டயமாக சில நடவடிக்கைகளையாவது தவறாமல் முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
நிபந்தனைகள் எதுவுமே அற்ற நிலையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் பிரேரணையானது இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறும் விடயத்திலும் - நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலும் - எந்த வகையில் ஊக்குவிக்கப் போகின்றது அல்லது செயற்படுவதற்குத் தூண்டப் போகின்றது என்பது தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த இண்டு வருட கால அவகாசத்தை, 'அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற கால அவகாசம்' என்று குறிப்பிடுவதற்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை.
'ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
'இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
'இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக, சர்வதேச பொறிமுறைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்' என அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்ற ஐ.நா. அலுவலகம் இலங்கையில் நிறுவப்படுமா, என்பதற்குரிய விளக்கம் ஐ.நா.மனித உரிமைப் பேரவையினால் அரசுக்கு இரண்டு வருட கால அவகாச நீடிப்புப் பிரேரணையில் காணப்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளவாறு, இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்லது அவருடைய அலுவலகம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் மேற்பார்வை செய்யுமா என்பதும் தெளிவில்லை.
மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கால நீடிப்புப் பிரேரணையானது, பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரையில், ஒரு சர்வதேச கண்துடைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.
Post a Comment