BREAKING NEWS

World News

Features Videos

தமிழ் இணையங்கள்

7 May 2017

பெளத்த மகாநாயக்கர்கள் ஒற்றுமைப்படுத்தி வைப்பர்

உலகில் ஓர் இனம்; இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் பாதிக்கப்பட்டு உரிமையைப் பெற முடியாமல் தவிக்கிறது எனும் போது அந்த இனத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் காணமுடியும்.
குறிப்பாக அந்த இனத்தின் தலைமை பிரிவுபட்டு நிற்கும் அல்லது விலைபட்டுப் போயிருக்கும். 

தவிர அந்த இனத்துக்குள்ளேயே கருத்து மோதல்களும் உட்கட்சிப்பூசல்களும் தலைவிரித்தாடும். சரியான திட்டமிடல்கள், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் எதுவும் இருக்காது.

கிடைத்த அதிகாரங்களையும் தக்கமுறையில் பயன்படுத்தாமல் எல்லாம் வீணடிக்கப்படும். மக்களை ஏமாற்றிப் பிழைப்பதில் ஒரு பகுதி ஆர்வத்தோடு செயற்படும். எங்கும் எதிலும் நிர்வாக மந்தம் தலைவிரித்தாடும்.

வளங்கள் உச்சப் பயனின்றி வீணாகிப் போகும், கலாசாரப் பண்பாட்டு விழுமியங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி இன அடையாளம் இல்லாததாகும்.

குறித்த இனத்துக்குள் இருக்கக்கூடிய மதங்கள் ஒன்றை ஒன்று விழுத்தி தத்தம் மதத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி  கடுமையாக நடக்கும்.

மதத் தலைவர்கள் ஒன்றுபட்டோ அல்லது ஒற்றுமைப்படுத்தவோ முயலாமல் தத்தம் மதக் கருத்துக்களை - மதமாற்றங்களை மேற்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.

இத்தகைய பலவீனங்களும் பாதிக்கப்பட்ட இனத்தை நிர்மூலமாக்கி சன்னதம் ஆடும்.
இந்நிலையில் அதிகாரம் செலுத்தும் இனத்திடமிருந்து உரிமை பெறுவதென்பது முடியாத காரியமே.

இவை உலக வரலாற்றில் உரிமையின்றி தத்தளிக்கும் மக்கள் குழுமத்திடம் இருக்கக் கூடிய அடிப்படை இயல்புகள்.

இந்த இயல்புகள் எங்கள் இனத்திடம் உள்ளதா? இல்லையா? என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் இருந்தால் அதை நேர்மையோடு ஏற்று அக்குறைபாட்டை நிவர்த்திக்க முற்படுவதே பொருத்தம்.

எனினும் குறைபாட்டை நிவர்த்திப்பது யார்? அதை பொறுப்போடு நின்று செய்து முடிப்பது யார்? என்ற வினாக்கள் எழவே செய்யும்.

எதுவாயினும் எங்கள் இனம் பற்றி நாம் இவ்விடத்தில் எதனையும் குறிப்பிடாமல் விட்டாலும் பெளத்த சிங்கள ஆட்சி; அவர்களின் திட்டமிடல்கள் பற்றி நாம் ஒரு கணம் சிந்தித்தால்,

வட புலத்தில் இருக்கக்கூடிய படையினர் இப்போது வட மாகாணத்தில் வெசாக் பண்டிகைக்கான கூடுகள் மற்றும் பெளத்த மத வரலாற்றுத் தளங்களை காட்சிப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுதம் ஏந்தி நாட்டைப் பாதுகாக்கின்ற படையினர் சமயச் சடங்குகளில் தங்களை ஈடுபடுத்துகின்றனர் என்றால் அது இலங்கையில் மட்டுமே நடப்பதாக இருக்கும்.

ஆக, இங்குதான் பெளத்த ஆதிக்கம் சிங்கள மக்களை ஒன்றுபடுத்தி - ஒற்றுமைப்படுத்தி தனது இனம், தனது மதம் என்ற நினைப்போடு வியூகம் அமைக்கிறது.

இப்போது கூட; நல்லாட்சி பலவீனம் எனக் கண்டால், ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவையும் ஒற்று மைப்படுத்துவதில் மகாநாயக்கர்கள் கடுமையாகப் பாடுபடுவர்.

ஏனெனில் இலங்கையின் வரலாற்றில் சிங்கள அரசர்களை ஒற்றுமைப்படுத்துவதில் மகா நாயக்கர்களே முக்கிய வகிபங்கை கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிய முடியும்.

Post a Comment

 
Copyright © 2016 UN Tamil
Created SRi. Powered by Eelanila