தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் எதிர்பார்த்த எதையும் அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அவர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் அரசாங்கத்திற்கெதிராக குரல் எழுப்பவும், கேள்வி கேட்கவும் முடியுமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கில் இன்னும் இராணுவம் அகற்றப்படவில்லை. இன்று வரை அவர்கள் அங்கே நிலைகொண்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினர் தற்போது வீதிகளை அமைக்கின்றனர், கடைகளை நடத்துகின்றனர், ஆரம்ப பாடசாலைகளை நிறுவுகின்றனர், அங்குள்ள பாடசாலை மைதானங்களுக்கு சென்று விளையாடுகின்றார்கள். அங்கிருக்கும் மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கின்றனர்.
வீதிகள் புனரமைக்க, மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க இவற்றிற்கு அரசாங்கமே மாற்று நடவடிக்கையெடுக்க வேண்டும். இராணுவத்தினரின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் தெற்கில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதில்லையே? ஏன் வடக்கில் மட்டும் இராணுவத்தினர் இவ்வாறு செயற்படுகின்றனர்? வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இதற்காக அரசாங்கம் மாற்றுத் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் சுதந்திர ஊடக ஏற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சுனந்த தேசப்பிரிய வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பதில்: நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை வருட காலமாகிவிட்டது. இந்த காலத்திற்குள் நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைநாட்டப்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாட்டு மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்திற்கெதிராக சுதந்திரமாக ஊர்வலங்கள் செல்லலாம். முன்னைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறு ஊர்வலங்கள், மக்கள் கூட்டங்கள் என்பவற்றிற்கு பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருந்தன. மேலும் இவ்வாறான கூட்டங்களின் போதும் ஊர்வலங்களின் போதும் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
தற்போது அந்த சுதந்திரத்தை நாட்டுக்குள்ளே நல்லாட்சி அரசு நிலைநாட்டியுள்ளது. மேலும் சுயாதீனமான ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மனித உரிமை பேரவை சுயாதீனமாக இயங்குகிறது. ஜனநாயக நாட்டில் ஆணைக்குழுக்கள் சுயாதீமாக இயங்கினால் மாத்திரமே நாட்டில் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை இனங்காணவும் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.
நீதிமன்றங்களும் தற்போது சுயாதீனமாக இயங்கி வருகின்றன.19ஆவது திருச்சட்ட அரசியலமைப்பிலும் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவை யாவற்றையும் ஒரு கோணத்திலிருந்து பார்க்கையில் முக்கிய வேலைகள் நடந்துள்ளன. ஆனால், மக்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு புதிய நல்லாட்சி அரசாங்கம் முன்னோக்கி செல்லவில்லை.
இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. நல்லாட்சியில் பதவியிலிருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டரசாங்கம். மேலோட்டமாக இவ்விரு கட்சிகளும் நண்பர்கள் போல இருந்தாலும் உள்ளுக்குள் வெட்டுக்களும் குத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதனாலேயே அரசாங்கத்தால் ஒன்றாக வேலை செய்ய முடியவில்லை. மேலும் ஒரே பாய்ச்சலில் முன்னோக்கி செல்லவும் முடியாமலிருக்கிறது. இதுதான் நல்லாட்சி அரசு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை. ஒரே இலட்சியத்துடன் செயற்படவும் முடியாமலிருக்கிறது. கூட்டரசாங்கம் ஒன்றாக பணிபுரிந்து முன்னோக்கி செல்லமுடியும் என்பதை இதுவரை நிரூபிக்கவும் இல்லை.
எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே சிறந்த புரிந்துணர்வொன்று இருக்கின்றது. இந்த புரிந்துணர்வுதான் கூட்டரசாங்கத்தை முன்கொண்டு வருகின்றது. அடுத்த பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அச்சுறுத்தலும் இருக்கின்றது.
இந்த சவாலான நிலைமையிலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடிந்த நடவடிக்கைகள் பல நிலுவையில் இருக்கின்றன. தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் எதிர்பார்த்த எதையும் அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அவர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் அரசாங்கத்திற்கெதிராக குரல் எழுப்பவும், கேள்வி கேட்கவும் முடியுமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கில் இன்னும் இராணுவம் அகற்றப்படவில்லை. இன்று வரை அவர்கள் அங்கே நிலைகொண்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினர் தற்போது வீதிகளை அமைக்கின்றனர், கடைகளை நடத்துகின்றனர், ஆரம்ப பாடசாலைகளை நிறுவுகின்றனர், அங்குள்ள பாடசாலை மைதானங்களுக்கு சென்று விளையாடுகின்றார்கள். அங்கிருக்கும் மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கின்றனர்.
வீதிகள் புனரமைக்க, மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க இவற்றிற்கு அரசாங்கமே மாற்று நடவடிக்கையெடுக்க வேண்டும். இராணுவத்தினரின் உதவிகளை பெற்றுக்ககொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் தெற்கில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதில்லையே? ஏன் வடக்கில் மட்டும் இராணுவத்தினர் இவ்வாறு செயற்படுகின்றனர்? வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இதற்காக அரசாங்கம் மாற்றுத் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்தது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு இருக்கும் பிரச்சினை. இதை மிக இலகுவாகத் தீர்க்கமுடியும். இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் ரீதியாக விருப்பமின்மையே காரணமாகும்.
இராணுவ முகாம் அகற்றுவது ஒருபுறமிருக்கட்டும். இன்றும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். அப்பகுதியில் செயற்படும் மனித உரிமை ஆர்வலர்களிடம் இராணுவ புலனாய்வுப்பிரிவினர் கேள்விகளை எழுப்புவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் விரும்பிய மாற்றத்தை அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியவில்லை. தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியுமாக இருந்தபோதும் அரசாங்கம் அதை செய்யவில்லை.
சிங்கள, தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறி வருகின்றபோதும் செயற்பாட்டளவில் அதை செய்யமுடியவில்லை. தமிழ் மக்கள் உணரும் வகையில் எதுவும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
கேள்வி: நல்லாட்சி அரசாங்கத்தில் புரயோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமென நம்பமுடியுமா?
பதில்: சரித்திரத்தில் இது முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும். இனப்பிரச்சினையை தீர்க்க 2004ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டபோதும் இதை செய்ய முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதைச் செய்ய முயற்சித்தார் அவராலும் முடியாமல் போய்விட்டது. இப்போது ராஜபக் ஷவின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. எதிர்வரும் வருடங்களிலும் இக்கட்சிகள் ஒன்றிணைந்தே செயற்படுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்மையிலேயே இப்பிரச்சினையை தீர்க்கவேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. இவருக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க போலவே இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற அபிலாஷை இருக்கின்றது. சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு இதை பகிரங்கமாக தெரிவிக்கும் தைரியம் இருந்தது. இவரிடமும் இதே தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கை முன்னோக்கி செல்லமுடியாது என்பது இவர்களுக்கு தெரியும்.
இனப்பிரச்சினைக்கு நல்லாட்சி அரசில் தீர்வு கிடைக்குமா? என்பது குறித்து சரியாக என்னால் கூறமுடியாதுள்ளது. ஆனால் எப்படியாவது இதைத் தீர்க்கவேண்டும். நல்லாட்சி அரசால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இதைவிட முன்னோக்கிச் சென்று தீர்வைக் காண முடியாவிட்டால், பிறிதொரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கப் போவதில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள்ள பொறுப்பு என்னவென்றால், ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொள்வதுதான். இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் காண முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்வர் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க முடியும். சர்வதேச நாடுகளின் அழுத்தமும் இருக்கின்றது. புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தமும் கூடவே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பின்னால் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் இதுவே. இது நடக்குமென நாம் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. இதை நிறைவேற்றிக்கொண்டேயாக வேண்டும்.
கேள்வி: இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மஹிந்த ராஜபக் ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோரின் இனவாதமும் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காது என எண்ணுவதும் ஒரு காரணமென கூறப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இக்கட்சிகள் பின்வாங்குவதற்கு இதுவொரு காரணமாக இருக்கலாம். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீல.சு.கட்சியை முழுமையாகத் தனது கைக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.
ஸ்ரீல.சு.கட்சியை அவர் முழுமையாக தனது கைக்குள் கொண்வந்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும். ராஜபக் ஷக்களின் அரசியலுக்கு எதிராக இவர்கள் அரசியல் செய்யப்போவதில்லை. 2002ஆம் ஆண்டு அடிமட்ட மக்களை இனப்பிரச்சினை குறித்து தெளிவுபடுத்த “மேர்ஜ்” போன்ற அமைப்புக்கள் இருந்தன. பெரும்பாலான சிங்கள மக்கள் இனப்பிரச்சினை தீர்வதை விரும்புகின்றனர். ஆனால் அடிமட்ட மக்களை தெளிவுபடுத்தவேண்டும். தீர்வு கண்டால் என்ன நடக்கும்? தீர்வு காணாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து அடிமட்ட மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்.
மஹிந்த ராஜபக் ஷவின் அச்சுறுத்தலுக்கு, அவரது பலத்துக்கு அரசாங்கம் எவ்வாறு முகம்கொடுக்க போகின்றது. இது குறித்து அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை. இனப்பிரச்சினை தொடர்பாக இந்த அரசாங்கம் ராஜபக் ஷவிடம் அரசியல் ரீதியாக மோதத் தயாராக இல்லை. இதுதான் இந்த அரசாங்கத்தின் இனப்பிரச்சினை தொடர்பான பலவீனமாகும்.
கேள்வி:ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் ஆளும் தரப்பின் பிரசார மேடைகளில் ஊழல், மோசடி பேர்வழிகள் கைது செய்யப்படுவார்கள், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இருந்தும் இதை வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீல.சு. கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். “பாஸ்போர்ட்” விவகாரத்தில் விமல் வீரவன்சவை கைது செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அவரைக் கைது செய்யாமல் அவருடன் “டீல்” செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பாதயாத்திரை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவை உண்மையா?
பதில்:அரசியல் ரீதியாக பார்க்கப்போனால் ஸ்ரீல.சு.கட்சி பலவீனமடைவதையே ஐ.தே.கட்சி விரும்புகின்றது. இதன் காரணமாக மஹிந்த ராஜபக் ஷ பலம்பெற வேண்டுமென ஐ.தே.க. நினைக்கின்றது. ஸ்ரீல.சு.கட்சி ஒன்றுபட்டிருந்தால் எதிர்கால தேர்தல்களில் ஐ.தே.க. தோளுக்கு தோள் போட்டியை எதிர்நோக்கும் நிலையேற்படும். சிலவேளை சிங்கள மக்களின் வாக்குகளால் தோல்வியடையவும் நேரிடலாம்.
இதன் காரணமாக ஸ்ரீல.சு.கட்சியை பலவீனப்படுத்த மஹிந்த ராஜபக் ஷ குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதில் காலதாமத்தை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை மறுத்துவிடவும் முடியாது. ஜனாதிபதி மீதும் இப்போது அழுத்தம் இருக்கிறது. அவர் ஊழல், மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்கும்படி பணித்துள்ளார்.
இருந்தும் இந்த விசாரணைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன. இதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. இது துரிதமாக இடம்பெற்றால், நிலைமை முற்றாக மாறுபடும். பெரும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
திஸ்ஸ அத்தநாயக்க போலி கையெழுத்துடனான ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இதைப்போல் கைவிடப்பட்ட வழக்குகள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது சுயாதீன பொலிஸ் சேவை இல்லையென்றே எண்ணத் தோன்றுகின்றது.
அரசாங்கம் இதுதொடர்பாக விசாரணை செய், அதைக் கைவிடு என்று உத்தரவிடும் அளவுக்கு இருந்தால் சுயாதீனமான பொலிஸ் சேவை இருக்கின்றதெனக் கூற முடியாது. இது போன்ற ஊழல் மோசடி தொடர்பான வழக்குகளை துரிதமாக முடித்துவிடவும் முடியாது. இவ்வழக்குகளுக்கு நூற்றுக்கணக்கான சாட்சியங்களை ஆஜர் செய்யவேண்டிய நிலையேற்படும்.
எனவே, ஊழல், மோசடி தெடர்பாக தனியான நீதிமன்றமொன்றை உருவாக்கவேண்டும். இதுதான் இதற்குரிய ஒரேதீர்வு. யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய தனியான நீதிமன்றங்கள் அமைக்க முடியுமானால் இதற்கும் தனியான நீதிமன்றமொன்றை நிறுவ முடியும். அத்துடன் ஊழல், மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர முடியும். இப்படி செய்ய முடியாத காரணத்தினாலேயே இந்த வழக்குகள் தாமதமாகின்றன. இதற்கான முழுக் குற்றத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்த முடியாது. இந்தக்குற்றத்துக்கு இரண்டு முக்கியஸ்தர்களுமே பொறுப்புக் கூறவேண்டும்.
கேள்வி: இந்த அரசாங்கம் சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக கூறுகின்றது. இந்த ஆணைக்குழு எதற்காக?
பதில்: இந்த அரசாங்கத்திற்குள்ள பலவீனம் இதுதான். அரசாங்கம் ஊடகத்துறைக்கு சுதந் திரம் வழங்கியுள்ளது. இப்போது கருத்துச் சுதந்திரமும் பேச்சுச்சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. இருந்தும் இந்த அரசாங்கத்துக்கு ஊடகங்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் திட்டித் தீர்க்கின்றனர். ஊடகங்களில் பிழையான செய்திகள் வரலாம். இது தொடர்பாக வழக்குத் தொடர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கம்போது ஏன் திட்டித் தீர்க்கவேண்டும். அரசாங்கம் ஊடகத்தை பார்க்கும் பார்வை தவறானது. அரசாங்கத்துக்கு சக்திமிக்க ஊடகங்கள் இருக்கின்றன.
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் இருக்கின்றன. அரச ஊடகங்களை சுதந்திரமாக இயங்கச் செய்யும் சந்தர்ப்பம் இவர்களுக்கு இருந்தது. ஆனால் அதைச் செய்யவில்லை. அரச ஊடகங்களை அரசாங்கம் தம்வசம் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றது. இதை சுயாதீனமாக இயங்குவதற்கு வழிசெய்திருந்தால் ஊடக சுதந்திரம் முழுமையடைந்திருக்கும்.
இந்தியாவில் அரசாங்கத்திற்கு எந்த ஊடகமும் சொந்தமாக இல்லை. 1972 வரை இலங்கையிலும் அரசாங்கத்துக்கு சொந்தமான ஊடக நிறுவனங்கள் இருந்ததில்லை. ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு தகவலறியும் சட்டமூலம் கொண்டுவந்தபோதும் ஊடகங்களை கையாளும் முறை தெரியவில்லை. இப்போது ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையொன்றை கொண்டுவர முயற்சிமேற்கொள்ளப்படுகிறது.
இது தவறு. அரசாங்கத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கநெறிக்கோவையொன்றை கொண்டுவருவதற்கு அதிகார மில்லை.
கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டு நீதியரசர்கள், வழக்குத் தொடுநர்களை நியமிக்கவேண்டுமெனவும் கூறப்பட்டள்ளது. இது சாத்தியப்படுமா? இலங்கையின் அரசியலமைப்பில் இதற்கு இடமுண்டா?
பதில்: வெளிநாட்டு நீதியரசர்களை நிய மித்தாலும் இதுமுறையாக விசாரணை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்திலும் மூன்று வெளிநாட்டு நீதியரசர்கள் வரவழைக்கப்பட் டனர்.
ஜப்பான், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் நீதியரசர்கள் வந்தனர். அந்த நாடுகளிலும் பணத்துக்காக வேலை செய்வோர் இருக்கின்றனர். அரசாங்கம் வெளிநாட்டு நீதியரசர்களை அழைக்க விரும்பினால் இது போன்றவர்களை வர வழைக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை கலப்பு நீதிமன்றத்தை கண்காணிக்க வழிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும். நியமிக்கப்படுபவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாக இருக்கவேண்டும்.
இந்த நிலையில் வெளிநாட்ட நீதியரசர் களை நியமித்தால் அது இனவாதிகளுக்கு தீனிபோட்டதாக அமையும். இதை வைத்து அவர்கள் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஐக்கிய நாடுகள் சபை யின் கண்காணிப்பின் கீழ் பொறிமுறை யொன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
இலங்கையர்களால் அல்லது வெளிநாடுக ளில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சட்டவல்லுநர்களால் இந்த விசாரணையை மேற்கொள்ளமுடியும். எமது சுயாதீனத்தை பாதுகாத்துக்கொள்ளக் கூடிய முறையொன் றே எமக்குத் தேவை.
மேலும் இந்தியாவிடமோ அல்லது ஜப் பானிடமோ கோரிக்கை விடுத்தால் இந்த அரசுக்குச் சார்பான இரண்டு நீதியரசர்களை அனுப்பிவைக்கக்கூடும். இதனால் முறை யான விசாரணை நடைபெறுமெனக் கூற முடியாது. ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன பொறிமுறையொன்றே இன்றை தேவை யாகும்.
Post a Comment