பட்டினத்தார் உலகப் பற்றைத் துறந்த புருர். இந்த உலகில் எதுவுமே சாத்தியமில்லை என்று கூறி பற்றறுக்கும் அவசியத்தை இந்த உலகுக்கு எடுத்தியம்பியவர் அவர்.
உலகப் பற்று எல்லாம் துறந்த பட்டினத்தார் தன் தாயின் இறப்பின் போது கதறி அழுகின்றார். தாயை நினைந்து நினைந்து அழுது புலம்புகின்றார்.
தாயின் இறுதிச் சடங்கைச் செய்யும் போது முன்னையிட்ட தீ முப்புரத்தில் பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் அன்னையிட்ட தீ அடி வயிற்றில் என்று பாடுகிறார்.
எல்லாம் துறந்த ஒருவரால் கூட தாயின் இறப்பைத் தாங்க முடியாது என்பதுதான் பட்டினத்தாரின் வாழ்வும் நமக்குச் சுட்டி நிற்கிறது.
எதுவாயினும் தீ என்பது நெருப்புக்கு மட்டும் உரிய பெயரன்று. எதெல்லாம் நம்மை எரித்துக் கொண்டிருக்கிறதோ அதெல்லாம் தீயின் வகைப்பட்டவை.
இறந்து போன தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய பட்டினத்தார் அன்னையிட்ட தீ அடி வயிற்றில் என்றார்.
தீயிட்டது பட்டினத்தார் எனினும் தன் தாயின் இழப்பால் ஏற்பட்ட துன்பம் எனும் தீ பட்டினத்தாரின் அடி வயிற்றில் மூழ்கிறது.
எந்தத் துன்பத்துக்கும் பரிகாரம் உண்டு. ஆனால் இறப்பெனும் துன்பத்துக்கு எந்தப் பரிகாரமும் கிடையாது. அதனால்தான் தாயின் இறப்பால் அடி வயிறு பற்றி எரிகிறது என்பார் பட்டினத் துறவி.
எரிந்த எந்தப் பொருளும் தன்னிலை இழக்கும்; பொன்னையும் சங்கையும் தவிர மற்றெல்லாம் தன்னிலை இழக்கும் தன்மை கொண் டது.
இதுதவிர தீயின் இன்னொரு இயல்பு வடுவைத் தரக் கூடியது. தீக்காயம் ஆறினாலும் அதன் அடையாளம் மாறுதற்குரியதல்ல. எரிகாயம் என்பதன் இயல்பு அது.
இந்த நிலைகளில்தான் அன்னையிட்ட தீ அடிவயிற்றில் என்றார் பட்டினத்தார். இது போலத்தான் எங்கள் தமிழினமும் ஆறாத ரணமாய் எரிநிலைபட்டுப் போய் உள்ளது.
ஆம், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வன்னி யுத்தம் முடிந்த நாள் முதல் வன்னிப் போர் ஆரம்பித்த நாள் வரை கொன் றொழிக்கப்பட்ட எங்கள் உறவுகள் ஏராளம்.
அந்த தமிழின அழிப்பை நினைக்கும் போதெல்லாம் இதயம் எரிந்து கருகிப் போகும். அந்தளவுக்கு வன்னி யுத்தம் தமிழினத்தை எரித்து அழித்து நெடுந்துயர் தந்துள்ளது.
எங்கள் இனத்தை அழித்து கொன்றது மட்டுமன்றி உயிரோடு இருக்கும் எங்கள் இதயங்கள் சதா எரிந்து போவதற்கும் முள்ளிவாய்க்கால் காரணமாயிற்று என்பதால்,
முன்னையிட்ட தீ முப்புரத்தில் எம் இனத்துக் கிட்ட தீ முள்ளிவாய்க்காலில் என்றுரைப்பது தவிர்க்க முடியாததே.
Post a Comment