BREAKING NEWS

World News

Features Videos

தமிழ் இணையங்கள்

22 June 2017

உரிமைகளுக்காய் உயிர் துறந்த தியாகி திலீபனின்

தமிழ் மக்கள் தமக்கே உரித்தான உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

கடந்த 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்த திலீபனின் தியாகப் பயணம் ஐந்து அம்சப் கோரிக்கைகளை பிரதானமாக கொண்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்பவையே குறித்த கோரிக்கைகள்.

ஈழத் தமிழ் மக்கள் சார்பிலான குறித்த கோரிக்கைகள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டு 24 மணித்தியாலய அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், 15ஆம் திகதிவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்த திலீபனின் போராட்டம் இதே நாளில் இம் மண்ணில் வித்தாகியது.

எம்மைப் போன்று எதிர்கால சந்ததியும் துன்பியல் வாழ்க்கைக்குள் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவும், எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை என்பதற்காகவும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென தான் உயிர்துறக்கும் தருவாயில் இறுதி உரையில் கூறயிருந்தார் திலீபன். அதற்கு பின்னர் மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழ, தியாகி திலீபனின் உயிர்த்தியாகமே காரணமாக அமைந்தது. இன்றுவரை திலீபனின் கனவை நனவாக்க தமிழ் மக்கள் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள், என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்.

தியாகி திலீபனின் நினைவுதினத்தன்று வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் ஒருவித அச்ச சூழல் நிறைந்திருந்த நிலையில் நல்லாட்சியில் அவை ஓரளவு தணிந்து காணப்பட்டாலும், கடந்த சில நாட்களாக புலனாய்வு நடவடிக்கைகள் சற்று அதிகரித்தே காணப்படுவதாக தெரியவருகிறது. தியாகி திலீபனுக்காய் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி புலம்பெயர் தேசங்களிலும் பல அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Copyright © 2016 UN Tamil
Created SRi. Powered by Eelanila